சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், மகான்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஆரம்பமானபோது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தில் எந்த ஒரு காட்சியிலும் அவர் இடம்பெறவில்லை. தற்போது, இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “படத்தில் சிம்ரன் விக்ரமை விட்டு பிரிந்த பிறகு, அதற்கு அடுத்த 20 வருடங்களில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் இருப்பது போன்ற சில காட்சிகளை ஷூட் பண்ணி விட்டோம்.
வாணி போஜனும் அந்த ரோலில் சூப்பராக நடித்திருந்தார். ஆனால், இரண்டாம் பாதியில் இடம்பெறும் அவருடைய காட்சிகளை கொரோனா 2-வது அலை பிரச்சனையின் போது எங்களால் ஷூட் பண்ண முடியவில்லை. அந்த கதாபாத்திரம் முழுமை பெறாமல் படத்தில் தோன்றக் கூடாது என்பதற்காக, அவருடைய அனைத்து காட்சிகளையுமே தூக்கிட்டோம். இதற்காக நான் வாணி போஜனிடம் மன்னிப்பு கேட்டேன்” என்று கூறியுள்ளார்.