நடிகர் ரஜினிகாந்த் தன் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா செல்வது வழக்கம்.

  • June 30, 2021 / 01:33 PM IST

கடந்த 16 மாதங்களாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா செல்லவில்லை.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று தன் மனைவி லதாவுடன் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார் ரஜினிகாந்த்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்து இருந்தது அமெரிக்கா.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் எப்படி சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம்? என கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவுகளில் கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தார்.

கஸ்தூரி கூறியிருப்பதாவது:

“இந்தியாவிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு அமெரிக்கா மே மாதமே தடை விதித்துவிட்டது. இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

பிறகு எப்படி, ஏன் ரஜினிகாந்த் இந்தக் காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டார்?

அவர் அரசியலிலிருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி அவர்களே, தயவுசெய்து தெளிவுப்படுத்துங்கள்.

தெளிவுக்காக: அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி இருக்கிறது.

எனவே ரஜினியின் இந்தப் பயணம் கண்டிப்பாக மர்மமே.

இந்திய அரசிடமிருந்து மருத்துவக் காரணங்களுக்காக ரஜினி விதிவிலக்குக் கோரி அனுமதி பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். இது இன்னும் கவலைக்குரியது.

இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் சிகிச்சை தர முடியாத அளவுக்கு அப்படி என்ன அவருக்கு உடல் உபாதை? வழக்கமான பரிசோதனை என்றார்கள்.

மாயோ க்ளினிக் என்பது இருதய சிகிச்சைக்கானது.

ரசிகர்களே, ரஜினிகாந்துக்கு விதிமுறைகள் கிடையாது என்றெல்லாம் வந்து சொல்லாதீர்கள்.

சொல்வதற்கே மோசமான விஷயம் அது. இப்படிப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் மிக ஜாக்கிரதையாகச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.

இதற்கு தர்க்கரீதியாக ஒரு விளக்கம் இருந்தால் நம் அனைவருக்கும் அது தெரியவரும். ரஜினிகாந்த் உட்பட எவருமே விதிமுறைகளுக்கும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல”.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவுகள் சர்ச்சை ஆனது.

இந்த நிலையில் இன்று கஸ்தூரி தன் ட்விட்டரில் ரஜினி தரப்பில் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில்…

“அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
‘தலைவரை’ வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! #Rajinikanth #Annathe

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus