சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆனந்தி. ‘ஈ ரோஜுல்லோ, பஸ் ஸ்டாப், ப்ரியதமா நீவச்சாத குசலம்மா, நாயக், கிரீன் சிக்னல்’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்த ஆனந்திக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது ஹரிஷ் கல்யாண் படம் தான். அது தான் ‘பொறியாளன்’. ‘பொறியாளன்’ படத்துக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படம் நடிகை ஆனந்தியின் நடிப்புக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
‘கயல்’ படத்துக்கு பிறகு நடிகை ஆனந்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது நடிகை ஆனந்தி நடிப்பில் தமிழில் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும், எங்கே அந்த வான், அலாவுதீனின் அற்புத கேமரா, ஏஞ்சல், இராவண கோட்டம்’, தெலுங்கில் ‘ஸோம்பி ரெட்டி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், ‘கயல்’ ஆனந்தி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சேக் ஹாரிஸ் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக கதிர் நடிக்க உள்ளார். ஏற்கனவே, கதிரும், ஆனந்தியும் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தில் முக்கிய ரோலில் ‘கைதி’ படப் புகழ் நரேன் நடிக்க உள்ளாராம்.