பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின், அண்ணாத்த, சாணிக் காயிதம்’ என படங்கள் குவிந்தது.
கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா’, தெலுங்கில் ‘போலா ஷங்கர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஃபர்ஹான் பின் லியாகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் எடுத்துக் கொண்ட ஸ்டில்ஸையும் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷும், ஃபர்ஹானும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “கீர்த்தி சுரேஷும், ஃபர்ஹானும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். அவர்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பரவும் செய்தியை நம்ப வேண்டாம். அது வதந்தியே. கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் ஃபிக்ஸ் செய்ததும் கண்டிப்பாக நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.