பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின், அண்ணாத்த, சாணிக் காயிதம், மாமன்னன்’ என படங்கள் குவிந்தது.
கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, கண்ணிவெடி’ , ஹிந்தியில் ‘தெறி’ ரீமேக் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் தான் சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை குறிப்பிட்டு, அதற்கு காரணமான தனது குடும்பத்திற்கும், வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.