மலையாளம் டு பெங்காலி… தமிழில் ரீமேக்காகும் 5 மெகா ஹிட் படங்கள்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, தமிழில் உருவாகிக் கொண்டிருக்கும் சில ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ…

1.ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 – கூகுள் குட்டப்பன் :

மலையாள திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இந்த படத்தை இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கியிருந்தார். இதில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் சாஹிர், சைஜூ குருப் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மெகா ஹிட்டானது. தற்போது, இப்படம் தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற டைட்டிலில் ரீமேக்காகுகிறது. இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான தர்ஷன் – லாஸ்லியா, யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்க உள்ளனர். ஜிப்ரான் இதற்கு இசையமைக்க உள்ளார். கடந்த ஜனவரி 28-ஆம் தேதி இந்த படத்துக்கான பூஜை போடப்பட்டது. இதன் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

2.பெல்லி சூப்புலு – ஓ மணப்பெண்ணே :

தெலுங்கு திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பெல்லி சூப்புலு’. இந்த படத்தை இயக்குநர் தருண் பாஸ்கர் இயக்கியிருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா, ப்ரியதர்ஷி, நந்து, அனீஸ் குருவில்லா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. தற்போது, இப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஓ மணப்பெண்ணே’வில் ஹீரோ – ஹீரோயினாக ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். மேலும், முக்கிய ரோல்களில் அன்புதாசன், அபிஷேக் குமார், அஷ்வின் குமார், வேணு அரவிந்த், KSG வெங்கடேஷ், அனீஸ் குருவில்லா, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

3.மஃப்டி – பத்து தல :

கன்னட திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மஃப்டி’. இந்த படத்தை இயக்குநர் நாரதன் இயக்கியிருந்தார். இதில் ஷிவராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, சாயா சிங், தேவராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கைப்பற்றினார். இதில் ஹீரோவாக சிலம்பரசன் நடிக்க உள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் நடிக்க உள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், டிஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் நடிக்க உள்ளார்களாம். ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மூலம் ஃபேமஸான கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறாராம். இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் ‘பத்து தல’ என்று அறிவிக்கப்பட்டது. இதன் ஷூட்டிங்கை இம்மாதம் (பிப்ரவரி) ஆரம்பிக்க பிளான் போட்டுள்ளனர்.

4.நின்னு கோரி – தள்ளிப் போகாதே :

தெலுங்கு திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நின்னு கோரி’. இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியிருந்தார். இதில் நானி, நிவேதா தாமஸ், ஆதி, முரளி ஷர்மா, மௌனிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ சார்பில் கைப்பற்றினார். ஆர்.கண்ணனே இயக்கும் இதில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் பிரதான், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ‘தள்ளிப் போகாதே’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

5.வின்சி டா :

பெங்காலி திரையுலகில் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸான படம் ‘வின்சி டா’. இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியிருந்தார். இதில் ருத்ரனில் கோஷ், ரித்விக் சக்ரபோர்த்தி, அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் பெங்காலியில் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ சார்பில் கைப்பற்றினார். தமிழ் வெர்ஷனுக்கான திரைக்கதை மற்றும் வசனத்தை தயாரிப்பாளர் தனஞ்செயனுடன் இணைந்து பிரபல இயக்குநர் ராம் எழுதியுள்ளார்.

Share.