தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இப்படம் இந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, ‘பிக் பாஸ்’ ஜனனி ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு அனிருத் இசையமைத்திருந்தார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
இப்படம் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “ரஜினியின் ‘தலைவர் 171’, கார்த்தியின் ‘கைதி 2’ படங்களுக்கு பிறகு விஜய்யின் ‘லியோ 2’வுக்கான ஸ்க்ரிப்டை எழுதுவேன்” என்று கூறியுள்ளார்.