தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் ரஜினியின் கேரியரில் 171-வது படமாம். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்துக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.