இந்த வருடம் தமிழில் புகழ்பெற்ற பாடலாசிரியர் விவேக் வேல்முருகனுக்கு சிறந்த வருடமாகவே அமைந்துள்ளது. அவரது எழுத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தில் சமீபத்தில் வெளியான “ரகிட ரகிட ரகிட” பாடல் ரசிகர்களிடையே தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை எழுதும்பொழுது தன் அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட விவேக் “இது ஒரு மகிழ்ச்சியான பாடல். நான் ஒரு கஷ்டமான நேரத்தில் இருக்கும்போது இந்த பாடலை எழுதினேன். ஒரு வகையில் இந்த பாடல் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. மகிழ்ச்சி என்பது நம் தேர்வுதான். அடுத்தவர் நினைப்பதை பெரிதாக எடுத்துக் கொண்டு நாம் வாழக்கூடாது என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த பாடல் அமைந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை இந்த பாடலுக்கு மேலும் பலத்தை கொடுத்துள்ளது என்று இசையமைப்பாளரை பாராட்டியுள்ளார்.
இந்த வருடம் “தர்பார்” படத்தில் இருக்கும் ‘சும்மா கிழி’, “சூரரைப்போற்று” படத்தில் ‘வெய்யோன் சில்லி’ பாடல், “கோப்ரா” படத்தில் வெளியான ‘தும்பி துள்ளல்’ பாடல் ஆகியவை இவரின் எழுத்தில் வெளியான பாடல்கள் ஆகும். இவை அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தற்போது பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் விவேக் இந்த வெற்றிகளை எப்படி ஒரே நேரத்தில் அனுபவிப்பது என்று திக்குமுக்காடி உள்ளாராம்.
2015 ஆம் வருடம் வெளியான “எனக்குள் ஒருவன்” படத்தில் ‘பூ அவிழும் பொழுதில்’ பாடலை எழுதியது மூலம் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் விவேக் வேல்முருகன். இந்த படத்தில் தொடங்கி 36 வயதினிலே படத்தில் “வாடி ராசாத்தி”, இறைவி படத்தில் “மனிதி வெளியே வா”, விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வரும் “சிங்கப் பெண்ணே” போன்ற பெண்கள் முன்னேற்றம் குறித்த பாடலையும் இவர் எழுதியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி, தர்பார், பேட்ட ஆகிய படங்களிலும் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ்நாராயணன், ஜிவி பிரகாஷ் குமார், அனிருத் ரவிச்சந்தர், யுவன் சங்கர் ராஜா, ஷாம்.சி.எஸ், கோவிந்த் வசந்தா, இளையராஜா, விஜய் ஆண்டனி, தமன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார்.
பெரிய பெரிய நட்சத்திரங்களின் பாடல்களை எழுதும் பொழுது தன் அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட விவேக் “பெரிய நட்சத்திரங்கள் பாடல்களை எழுதுகிறேன் என்று நினைக்கும் போது பயத்தை விட ஆர்வமே அதிகமாக இருக்கும். ரஜினி போன்ற பெரிய நட்சத்திரங்களின் பாடல்களை எழுதும்போது மிக கவனமாக எழுத வேண்டியிருக்கும், ஏனென்றால் அவரது ரசிகர்கள் அவரது பாடல்களை முக்கியமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை மாற்றிக்கொள்வார்கள். அதனால் பொறுப்புடன் பாடல் வரிகளை எழுதுவேன்” என்று கூறியுள்ளார்.