‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது.
இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது. படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது.
பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இதன் புதிய ஷெடியூல் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினி சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இது தொடர்பாக ரஜினி தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவில் “கொரோனா லாக் டவுன் டைமில் இந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் இப்போது வரை எங்களது திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவே இல்லை. அப்படி இருக்கையில் இதற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆகையால், சொத்து வரி செலுத்த நிர்பந்திக்க கூடாது. மேலும், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும், அபராத வட்டி விதிக்கவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் என்பவர் “மாநகராட்சி உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களிலேயே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்ததோடு, அபராதம் விதித்து, இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய உள்ளேன்” என்று எச்சரித்துள்ளார். இதன் பிறகு ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கை திரும்ப பெறுவதற்கு அனுமதி கேட்க, நீதிபதியும் அனுமதி கொடுத்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.