சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட தனுஷின் வழக்கு… தீர்ப்பு என்ன தெரியுமா?
August 5, 2021 / 10:01 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ராயன், மாறன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
தனுஷ் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருந்த தனது சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு செய்யக்கோரி 2015-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது, இன்று (ஆகஸ்ட் 5-ஆம் தேதி) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஏற்கனவே 50% வரியை தனுஷ் செலுத்திவிட்டதால், மீதமுள்ள 50% வரியை இரண்டு நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில், இங்கிலாந்தில் இருந்து 2012-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விஜய், அதற்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூலை 13-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். பின், விஜய் தனக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த ஜூலை 27-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய்-க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.