சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜென்டில் மேன்’. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவருக்கு ‘காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0’ போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2, கேம் சேஞ்சர்’ என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இதில் ‘இந்தியன் 2’வில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும், ‘கேம் சேஞ்சர்’-ல் டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ராம் சரணும் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்விரு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30-ஆம் தேதி ‘ஜென்டில் மேன்’ வெளியாகி 30 ஆண்டுகள் ஆகி விட்டதால் இயக்குநர் ஷங்கர் அவருடைய உதவி இயக்குநர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
தற்போது, இயக்குநர் ஷங்கரின் 30 ஆண்டு திரைப்பயணத்துக்காக அவரை முன்னணி இயக்குநர் மணிரத்னம் தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்ததாக தகவல் கிடைத்துள்ளது. இவ்விருந்தில் பிரபல இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, கெளதம் மேனன், சசி, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனராம்.