சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் மனிஷா யாதவ். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘வழக்கு எண் : 18/9’. பாப்புலர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் மனிஷா யாதவ்வின் நடிப்பு அனைவரையும் லைக்ஸ் போட வைத்தது.
‘வழக்கு எண் : 18/9’ படத்துக்கு பிறகு நடிகை மனிஷா யாதவ்வுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை, சண்டிமுனி’ என படங்கள் குவிந்தது.
மனிஷா யாதவ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “நடிகை மனிஷா யாதவ்வுக்கு பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலியல் தொல்லை கொடுத்தார். அதன் பிறகு மனிஷா யாதவ், அந்த படத்திலிருந்து விலகியதுடன், ஒரு கட்டத்தில் திரையுலகிற்கே குட்-பை சொல்லி விட்டார்” என்று பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிட்டாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ‘ஒரு குப்பைக் கதை’ ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க… ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் விரைவில் வரும்” என்று குறிப்பிட்டு மனிஷா யாதவ் ‘ஒரு குப்பைக் கதை’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது, இது குறித்து நடிகை மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஒரு இசை வெளியீட்டு விழாவில் எல்லாருக்கும் நன்றி சொல்வதுபோல் தான் இயக்குநர் சீனு ராமசாமிக்கும் சொன்னேன். ஆனால், 9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பற்றி நான் கூறியதாக சொல்லப்படும் அனைத்து விஷயங்களுமே உண்மைதான். நான் ஏன் என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்ட இயக்குநர் சீனு ராமசாமியின் படத்தில் மீண்டும் பணியாற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.