“துக்ளக் தர்பார் திரைப்படத்தில் என் கதாபாத்திரம்”-மஞ்சிமா மோகன்!
July 30, 2020 / 08:19 PM IST
|Follow Us
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.
பிரபல ஒளிப்பதிவாளர் விபின் மோகனின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2019ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான “தேவராட்டம்” படத்தில் நடித்திருந்தார் மஞ்சிமா மோகன்.
இந்த படத்தில் தனது காலில் சிறிய அடிப்பட்டு ஆபரேஷன் செய்து படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்து வந்தார். தற்போது முழுமையாக குணமடைந்த மஞ்சிமா மோகன் F.I.R, துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் “துக்ளக் தர்பார்” திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து மஞ்சிமா மோகன் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்திய ஆன்லைன் நேர்காணல் ஒன்றில் பேசிய மஞ்சிமா மோகன், “துக்ளக் தர்பார்” திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கை வேடத்தில் இவர் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
தான் விருப்பப்பட்டுதான் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் தமிழ்சினிமாவில் இந்த கதாபாத்திரம் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “களத்தில் சந்திப்போம்” படத்தில் ஜீவாவுடன் நடித்தது புதிய அனுபவம் என்றும், படப்பிடிப்பின்போது ஜீவா ஏதாவது நகைச்சுவையாக பேசி கலகலப்பாக படப்பிடிப்பு தளத்தை வைத்திருப்பார் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் இவர் ஒரு கதையை தன் தந்தை பாதி எழுதியதாகவும் அதை முடிப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். கதை முடித்தவுடன்தான் இந்த திரைக்கதையை தான் இயக்குவதா இல்லை தன் தந்தை இயக்குவாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். மஞ்சிமா மோகன் “ஒரு வடக்கன் செல்ஃபி” என்ற மலையாள படத்திலும், “அச்சம் என்பது மடமையடா” படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.