தோனி படத்தில் நடித்த பிரபல பாலிவுட் திரைப்பட நடிகரான சுஷாந்த் சிங்ராஜ்புத் இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று காலை அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34. இந்த தற்கொலை பற்றி கூடுதல் போலீஸ் கமிஷனர் டாக்டர் மனோஜ் ஷர்மா கூறியதாவது” சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைதான் செய்து கொண்டார் .போலீஸ் விசாரணை செய்து வருகிறது. இன்னும் எந்த தற்கொலை கடிதமும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றிருக்கிறார்.
2013 ல் வெளியான “கைபோசே”என்ற பாலிவுட் படத்தில் தன் திரையுலக பயணத்தை தொடங்கிய இவர் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் “சிச்சோர்”. 2016 ஆம் ஆண்டு வெளியான” தோனி ” படத்தின் மூலம் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்த இவரது இழப்பு அனைவரது மத்தியிலும் ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் 2008 ஆம் ஆண்டு தனது நடிப்பை சின்னத்திரையில் ஆரம்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் தாய் 2002 ஆம் ஆண்டு இறந்தார். தன் தாயின் இழப்பு என்றும் நீக்க முடியாதது என்று பலரிடம் கூறியிருக்கிறார். இவர் கடந்த ஆறு மாதங்களாகவே டிப்ரஷனில் இருந்தார் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் கூறியிருக்கிறார்கள்.
சுஷாந்த் நடித்து அடுத்து வெளிவரவிருந்த திரைப்படம் முகேஷ்சாக்ரா இயக்கத்தில் உருவாகியிருக்கும்” தில் பச்சாரா”. இது பிரபல ஹாலிவுட் திரைப்படமான “த ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” படத்தின் ரீமேக் ஆகும். இவரின் திடீர் தற்கொலை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.