இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல தொழில்கள் பெரும் நஷ்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலை சரி ஆகும் வரை மக்கள் கூடும் பல இடங்களை அரசாங்கம் காலவரையின்றி மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளும், மல்டிப்ளெக்ஸ்களும் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி படங்களை வெளியிட மூன்று மாதங்களுக்கு மேல் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தியேட்டர் திறக்க அதிக தாமதம் ஆகும் என்பதால் , பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களை OTT-யில் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. தயாரிப்பாளர்கள் பலரும் OTT ரிலீசிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் அது தொடர்பாக மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.அதாவது திரைப்படங்களை OTTயில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும், நிலைமை சீரடையும் வரை காத்திருங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“அனைத்து ஸ்டூடியோக்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு கோரிக்கை ஒன்றை வைக்க விரும்புகிறோம். தியேட்டர்கள் மீண்டும் திறக்கும் வரை காத்திருந்து தங்கள் படங்களை தியேட்டரில் வெளியிட்டு இந்த துறைக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.”
“மீண்டும் படங்கள் ரிலீஸ் ஆக துவங்கினால், மக்கள் மீண்டும் தியேட்டருக்கு வர துவங்குவார்கள். புது படங்கள் ரிலீஸ் ஆனால் சினிமா துறை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும். தியேட்டரில் படம் பார்க்கும் ஒரு அனுபவத்தை மக்களுக்கு தர சினிமாவின் அனைத்து துறையினரும் ஆதரவு தந்தால் தான் முடியும்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.