தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இசைக்கருவிகளும் இசைக் குறிப்புகளும் திருடு போய்விட்டதாக வந்த செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜா ஆரம்ப காலத்திலிருந்து தனது பாடல்கள் அனைத்தையும் கம்போஸ் செய்து வந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இதனால் அவரது கருவிகள் இசை குறிப்புகள் அனைத்துமே பிரசாத் ஸ்டூடியோவில் தான் இருந்து வந்தது.
சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கும் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து காலி செய்து தருமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இது தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இளையராஜா தனி ஸ்டுடியோ ஒன்று அமைக்கப் போவதாகவும் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்தி வெளியாகியது.
இந்நிலையில் தன் அலுவலகத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள இசைக்கருவிகளும் குறிப்புகளும் இருந்ததாகவும், அவை அனைத்தும் திருடு போய் விட்டதாகவும் தனது குறிப்புகள் அனைத்தும் சேதமடைந்து விட்டதாகவும் இசைஞானி இளையராஜா தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திடீரென தன் பொருள்கள் அனைத்தும் திருடு போய்விட்டதாக இளையராஜா குறிப்பிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.