தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி Since 1960, அன்னபூரணி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘அன்னபூரணி’ படம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது படமாம். இதில் மிக முக்கிய ரோல்களில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா, கார்த்திக் குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ் – NAAD ஸ்டுடியோஸ் – டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. சமீபத்தில், இப்படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து இதில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தற்காலிகமாக நீக்கியது. மிக விரைவில் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனமும் அறிவித்திருந்தது.
தற்போது, இது குறித்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜெய் ஸ்ரீ ராம். எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.
தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.