சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். ரஜினியின் ‘2.0’ படத்துக்கு பிறகு இவர் இயக்கத்தில் ரெடியாகி வந்த படம் ‘இந்தியன் 2’. ஏற்கனவே, இப்படம் பல சிக்கலில் சிக்கித் தவித்தது. இதற்கிடையில் இதில் ஹீரோவாக நடிக்கும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனும் அரசியலில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான இயக்குநர் ஷங்கர் வேறு ஒரு புதிய படத்தை இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.
இந்த படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால் டென்ஷனான ‘இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக ‘லைகா’ நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் “ரூ.236 கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டு, அதில் ரூ.180 கோடி ஏற்கனவே செலவு செய்தும் இப்படத்தின் 80% பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டு, ஏற்கனவே ரூ.14 கோடி கொடுத்து விட்டோம். அவருக்கு கொடுக்க வேண்டிய பேலன்ஸ் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறோம், பேலன்ஸ் 20% படத்தை முடித்துக் கொடுக்க சொல்லுங்கள். அதுவரை மற்ற படங்களை இயக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “இயக்குநர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல், அவர் மற்ற படங்களை இயக்குவதற்கு தடை விதிக்க முடியாது. இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார். பின், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “இந்த படம் தொடர்பான பிரச்சனை குறித்து இயக்குநர் ஷங்கரும், ‘லைகா’ நிறுவனத்தினரும் இணைந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்” என்று கூறியிருந்தார்.
தற்போது, இன்று நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “இயக்குநர் ஷங்கரும், ‘லைகா’ நிறுவனத்தினரும் கடந்த சனிக்கிழமை நேரில் சந்தித்து பேசினார்கள். வருகிற ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதத்திற்குள் நான் இந்த படத்தை முடித்து கொடுக்கிறேன் என்று ஷங்கர் கூறினார். ஆனால், ‘லைகா’ நிறுவனமோ ஜூன் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது” என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.