அரசியலில் மட்டுமல்ல பாலிவுட் சினிமாவிலும் தொடரும் வாரிசு சாம்ராஜ்யம்!

  • June 18, 2020 / 09:38 AM IST

கடந்த ஜூன் 14 ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தற்கொலைக்கான காரணம் மன அழுத்தம் என்றும், இது பற்றி பலருக்கு தெரிந்தும் யாரும் உதவ முன்வரவில்லை என்றும் சில பிரபலங்கள் இணையதளத்தில் குறைகூறி வருகிறார்கள்.

மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இவரது அண்ணி இறந்தது மற்றும் இவரது ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துக்கமான செய்தியும் நேற்று வெளியாகியிருந்தது.

இவ்வளவு அழகு மற்றும் திறமை பொருந்திய இந்த நடிகர் தற்கொலை செய்து கொண்டதற்கு பாலிவுட் சினிமாவில் இயங்கிவரும் வாரிசு அரசியலே காரணம் என்று சில பாலிவுட் பிரபலங்கள் குறைகூறி வருகிறார்கள். அவர்கள் தங்களது குமுறல்களை ட்விட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அரசியலில் மட்டுமல்ல பாலிவுட் சினிமாவிலும் இந்த வாரிசு ஆட்சி நடைபெற்று தான் வருகிறது என்பதற்கு பல உதாரணங்கள் நம் முன்னே உள்ளன. ஆனால் அது ஒருவருக்கு இவ்வளவு மன அழுத்தத்தைத் தந்து அவர் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரகாஷ் ராஜ்,கங்கனா ரனாவத், சேகர் கபூர், சப்னா பவ்னானி என்று பல பிரபலங்கள் இவர் இறந்ததற்கு பாலிவுட் சினிமாவின் அமைப்புதான் காரணம் என்று குறை சாடியுள்ளனர்.

பிரபல தென்னிந்திய நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு அரசியல் பற்றி சுஷாந்த் சிங் ஒரு மேடையில் பேசிய வீடியோவை வெளியிட்டு ” #வாரிசுஅரசியல் நான் இதில் வாழ்ந்திருக்கிறேன், வளர்ந்திருக்கிறேன் அதனால் வந்த காயங்களின் வடு இன்னும் ஆறவில்லை. ஆனால் இந்த குழந்தையால் இதை தாண்டிச் செல்ல முடியவில்லை. இனிமேலாவது இதை எதிர்த்து யாரேனும் குரல் கொடுப்பார்களா! சுஷாந்த் போல பல கனவுகள் அழியாமல் பார்த்துக் கொள்வோமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவில் சுஷாந்த் சிங் வாரிசு அரசியல் பற்றி கூறியுள்ளதாவது” ஆம் வாரிசு அரசியல் எல்லா இடத்திலும் உள்ளது. அது மற்ற திறமையாளர்களுடன் சேர்ந்து இருக்கலாம்.ஆனால் வாரிசு அரசியல் மட்டுமே இயங்கி வந்தால் எண்ணற்ற திறமை கொண்ட கலைஞர்கள் இந்த துறைக்கு வர முடியாமலே சென்றுவிடும், அதனால் சினிமாவின் முன்னேற்றமே தடைப்படும்” என்று கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் வாரிசு அரசியலை இப்போது குறைகூறி வருகிறார்கள். மேலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கரண் ஜோகர் மற்றும் ஆலியா பட், சுஷாந்த் சிங் பற்றி ஏளனமாக பேசியதாகவும், அது தவறு என்று இணையதளத்தில் இவர்களை திட்டி தள்ளுகிறார்கள்.

இவர்களைப் போலவே கங்கனா ரனாவத்,சேகர் கப்பூர், கொய்னா மித்ரா, சப்னா பவ்னானி,நிக்கில் திவேதி,ரன்வீர் ஸோரே ஆகியோர் பாலிவுட் திரைப்பட அமைப்பின் அரசியல் குறித்தும், இந்த அமைப்பால் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் குறை கூறியிருக்கிறார்கள். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது தெரிந்தும் எந்த பிரபலமும் முன்வந்து உதவவில்லை என்றும், தன் சொந்த உழைப்பு மற்றும் திறமையால் மட்டுமே உயர்ந்த இந்த நடிகரை யாரும் சரியாக அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் உதவாமல் விட்டுவிட்டு இப்போது இரங்கலை தெரிவித்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus