தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தை இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரெமையா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்து தளபதி 65 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல் வந்தது.
ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்திற்கு விஜய் 80 கோடி சம்பளம் பெற்றார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அதனால் தளபதி 65 படத்திற்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டது என்று செய்தி வந்தது.
இதைத்தொடர்ந்து கொரோனா லாக்டவுன் வந்ததால் விஜய் தனது சம்பளத்தை 100 கோடியிலிருந்து 80 கோடிக்கு குறைத்துக்கொண்டார்.
தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அவரது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுள்ளதாக திரைப்பட வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் இது சரியாகவில்லை என்றால் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வமான தகவலுக்கு அனைவரும் காத்திருக்கிறார்கள்.