கொரோனா நிவாரண நிதியாக 1.30 கோடி ரூபாய் நடிகர் விஜய் கொடுத்திருந்த நிலையில் இன்று தனது ரசிகர்களுக்கு வங்கி மூலமாக 5000 பணம் அனுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்கள் முன்பு வரை தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் மட்டுமே எந்தவொரு நிதியுதவியும் வழங்காமல் இருந்தார். இது பெரும் சர்ச்சையாகவே இணையத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய்யும் தன் தரப்பிலிருந்து நிதியுதவியை அறிவித்தார். 1 கோடி 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக கூறினார். இதில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு 25 லட்ச ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய், பெப்சிக்கு 25 லட்ச ரூபாய், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் தன் ரசிகர்களுக்கு தலா 5000 வரை வங்கி கணக்கில் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணம் கிடைத்த பல ரசிகர்கள் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இரண்டரை லட்சம் ரசிகர்களுக்கு விஜய் பணம் அனுப்பியுள்ளார் என கூறப்படுகிறது. விஜய்யின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். விஜய்யின் சச்சின் படத்தினை இயக்கிய ஜான் மகேந்திரன் விஜய்க்கு நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார். உதவி செய்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும் ட்விட்டரில் உருக்கமாக நன்றி கூறி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். மேலும் வள்ளல் தளபதி விஜய் என்கிற ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். Vijay charitable trust என்ற அமைப்பு மூலமாக விஜய் இந்த தொகையை அனுப்பியுள்ளார்.