ஆஸ்கர் விருதானது உலகில் வழங்க கூடிய விருதுகளில் மிகபெரிய விருதாக பெரும்பாலான மக்களால் கருதப்படுகிறது. சினிமாவில் உள்ள ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த விருதை வெல்வது என்பது லட்சியமாக இருக்கும். அகாடமி விருதுகள் என்று அழைக்க கூடிய ஆஸ்கர் விருது மே 16, 1929 அன்று ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலிலும், மேபைர் ஹோட்டலிழும் முதல் முதலில் நடந்தது. இதில் மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன. அதன் பின்பு வருடம்தோறும் இந்த விருது விழா நடந்து வருகிறது. இதுவரை சுமார் 3140 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதில் வழங்கப்படும் தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி என்பவர். இந்த சிலை 13.5 இன்ச்(34.3 செ மீ) உயரமும் 3.856 கிலோ எடையும் கொண்டது. ஆஸ்கர் விருது ஜெயிப்பவர்களுக்கு 45 நொடிகள் மட்டுமே மேடையில் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். ஆஸ்கர் விருது வரலாற்றிலே இதுவரை மேடையில் அதிக நேரம் பேசியவர் கிரீர் கார்சன். 1942 ஆம் ஆண்டு சிறந்த நடிகை விருது வென்ற இவர் ஆறு நிமிடங்கள் உரையாற்றினார். அதன் பின்னரே விருதை ஏற்றுக்கொள்ளும் உரைக்கான நேர அளவு குறைக்கப்பட்டது.
ஆஸ்கர் விருதில் ஒரு திரைப்படம் பங்குபெற வேண்டுமென்றால், அந்த படம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஏதாவது ஒரு திரையரங்கில் குறைந்தபட்சமாக 7 நாட்களாவது திரையிட பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. எனவே இந்த விதியில் ஆஸ்கர் விருது வழங்கும் குழு ஒரு சிறு திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. என்னவென்றால் டிஜிட்டல் தளங்களில் அதாவது OTT-யில் வெளியிடப்படும் படங்களும் 2021-இல் நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் என ஆஸ்கர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. இதனால் பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்