தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இந்த படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டதுடன், முதல் சிங்கிள் டிராக்கான ‘நா ரெடி’யை வருகிற ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸாகும் என அறிவித்தனர். இந்த போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று இருப்பதால் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! ‘லியோ’ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது.
நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். #SmokingKills #SayNoToTobacco” என்று பதிவிட்டுள்ளார்.