தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ என்ற பாடலுக்கான போஸ்டரையும், பாடலையும் ரிலீஸ் செய்தனர்.
தற்போது, இப்போஸ்டர் மற்றும் பாடல் காட்சியில் விஜய் புகைப்பிடிப்பது போன்று நடித்திருப்பது வருங்கால தலைமுறையினரை தவறான போதைப்பொருளுக்கு அடிமையாக்க தூண்டுவது போல் இருக்கிறது என்றும், இதனால் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், பாடலை எழுதிய விஷ்ணு எடவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்வதோடு அந்த பாடல் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்து தமிழர் பேரவை தலைவர் மவுண்ட்.கோபால்.எஸ்.ஜே புகார் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
லியோ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் காட்சிகளில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வன்முறைகள் தூண்டுதல் தொடர்பாக லியோ படத்தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்,நடிகர் விஜய் மீது நடிக்கை எடுக்க வேண்டுகிறேன் @chennaipolice_ @tnpoliceoffl @CMOTamilnadu pic.twitter.com/TKFLXbTZQY
— Mount.Gopaal.SJ (@mountgopaal) June 26, 2023