Paruthiveeran : “அமீரை திருடன், வேலைதெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல”… ‘பருத்திவீரன்’ பிரச்சனை தொடர்பாக பேசிய பொன்வண்ணன்!

  • November 27, 2023 / 06:24 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

சமீபத்தில், இந்த படத்தை தயாரித்த ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் “‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

தற்போது, பிரபல இயக்குநரும், இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகருமான பொன்வண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “‘பருத்தி வீரன்’ திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்!
அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு . தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் … ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது.
இதனால்தான்,பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும்,விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும், திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும், பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் . உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக .. திருடன், வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும், வக்கிரமாக இருந்தது..!

தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!
இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.!
பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற
ஆசைகளுடன்.. ப்ரியங்களுடன் பொண்வண்ணன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus