பாலிவுட் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூனம் பாண்டே. இவர் ஹிந்தியில் அறிமுகமான முதல் படம் ‘நாஷா’. இதில் ஹீரோவாக ஷிவம் படில் நடிக்க, இதனை அமித் சக்ஸேனா இயக்கியிருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு கன்னடத்தில் ‘லவ் இஸ் பாய்சன்’ மற்றும் ஹிந்தியில் ‘ஆ காய ஹீரோ’ ஆகிய படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடினார் பூனம் பாண்டே. பின், தெலுங்கில் ‘மாலினி & கோ’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
பூனம் பாண்டே நடித்த கடைசி ஹிந்தி படமான ‘தி ஜர்னி ஆஃப் கர்மா’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு ‘லாக் அப்’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் இவர் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்று நடிகை பூனம் பாண்டே (வயது 32) கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) பாதிப்பால் இயற்கை எய்தினார் என அவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.
இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது, நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “நான் இன்னும் சாகவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன். நான் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படவும் இல்லை. கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் நான் அவ்வாறு செய்தேன். அப்படி செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.