தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. விஜய்-யின் 67-வது படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கவிருக்கிறார்.
இதற்கான பூஜையை வருகிற அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி போட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கிரீஸ் கங்காதரன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் இப்போது கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.