இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

  • March 14, 2021 / 10:45 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கிய முதல் படமே சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. அந்த படம் தான் ‘இயற்கை’. இதில் ஷாம், அருண் விஜய் , குட்டி ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுத்து வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் இயக்கியுள்ள புதிய படமான ‘லாபம்’-யில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் நடித்துள்ளார். கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்த படத்தின் எடிட்டிங் பணியில் பிஸியாக பணியாற்றி கொண்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றிருக்கிறார்.

பின், நீண்ட நேரம் ஆகியும் எஸ்.பி.ஜனநாதன் அலுவலகத்திற்கு வராததால், அவருடைய உதவி இயக்குநர் வீட்டுக்கே சென்றுள்ளார். அங்கு எஸ்.பி.ஜனநாதன் சுய நினைவின்றி இருந்ததை அடுத்து அவரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன் பிறகு ICU-வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 14-ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus