பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதில் அதர்வா கிடையாதாம்… இவர்தான் ஹீரோவாம்!

  • December 22, 2022 / 12:33 AM IST

பிரபல இயக்குநர் பாலா – டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா கூட்டணியில் உருவாகி வந்த புதிய படம் ‘வணங்கான்’ இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. மிக விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி இயக்குநர் பாலா வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் “வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன்.

ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-ல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ பணிகள் தொடரும்” என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்கப்போகிறார் என கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இதில் ஹீரோவாக பிரபல நடிகர் அருண் விஜய் நடிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இதன் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி மாதம் ஆரம்பிக்க இயக்குநர் பாலா ப்ளான் போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus