என்னை கடந்து செல்லும் சக மனிதனுக்கு என்னால் இயன்றதை செய்துக்கொண்டே இருப்பேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ரெயில், பேருந்து உள்ளிட்ட வசதிகளை மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் நெடுஞ்சாலைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை இன்னும் குறைந்தபாடில்லை. அவ்வாறு செல்லும் பல தொழிலாளர்கள் உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் கூட கிடைக்காமல் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஊரடங்கால் அவதியுறும் மக்களுக்காக சினிமா பிரபலங்கள் பலர் பல்வேறு வகைகளில் உதவிகளை செய்து வருகின்றனர். அவ்வகையில், நடிகர் பிரகாஷ்ராஜும் ஊரடங்கால் தவித்து வந்த கிராம மக்களை தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறார். அதுபோல, சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி வருகிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் பிச்சை எடுத்தாலும், கடன் வாங்கினாலும் என்னை கடந்து செல்லும் சக மனிதனுக்கு என்னால் இயன்றதை செய்துக்கொண்டே இருப்பேன். அவர்கள் எனக்கு திருப்பி தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு, வரும் வழியில் எங்களுக்கு ஒருவர் நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கி உதவினார் என நினைத்தாலே போதும் என பதிவிட்டுள்ளார்.