மலையாள சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘நேரம்’. இப்படம் மலையாள மொழி மட்டுமின்றி தமிழ் மொழியிலும் ரிலீஸானது. இதில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் – நிவின் பாலி கூட்டணியில் வெளியான மலையாள படம் ‘ப்ரேமம்’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.
‘ப்ரேமம்’ படத்துக்கு பிறகு அல்போன்ஸ் இயக்கிய ‘கோல்டு’ திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இதில் ப்ரித்விராஜ் – ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர். சமீபத்தில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய தமிழ் படத்துக்கு ‘கிஃப்ட்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாகவும், இதில் கதாநாயகனாக சாண்டி நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் படங்கள் இயக்குவதை நிறுத்திக்கொள்ளப் போகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பது நேற்று தான் தெரிய வந்தது. நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இனிமேல் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் OTT-யில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். பின், அவரே இப்பதிவை நீக்கியுள்ளார்.