2019-ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘கைதி’. மிக விரைவில் ஹிந்தி மொழியில் இப்படம் ரீமேக் ஆகவுள்ளது. மேலும், ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகமும் தமிழில் உருவாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை தான் எழுதியது என்று கூறி நிஜ ஜெயில் கைதியான ராஜீவ் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததாகவும், ஆகையால் இப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரிக்க கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.
தற்போது, இது தொடர்பாக ‘கைதி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அனைவருக்கும் வணக்கம். எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் திரு. கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘கைதி’ திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.
இது சம்பந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் ‘கைதி’ சம்பந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.
#Kaithi pic.twitter.com/PvndRtmGMI
— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 4, 2021