பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தனது சம்பளத்தில் இருந்து நிவாரணத் தொகையை தூய்மைப் பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு செய்த வண்ணம் உள்ளனர். இதில் திரைப்பட பிரபலங்களும் அடங்கும்.
திரைப்பட பிரபலங்கள் அளித்த நிவாரண தொகைகளில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த தொகையே அதிகம் என்று செய்திகள் வந்துள்ளது. இவர் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி அளித்தார்.
இப்போது உள்ள நிலையில் எவ்வளவு பணம் நிவாரணமாக கொடுத்தாலும் பத்தாது என்பதால் மேலும் நிவாரணம் வேண்டி இவரிடம் கோரிக்கைகள் குவிந்துள்ளது. சண்டைக் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பல தரப்பினரும் இவரிடன் உதவி கோரியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சாதாரண மக்களும் கடிதங்கள் மூலமும் வீடியோ மூலமும் இவரிடம் உதவி கேட்டுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது தனக்கு இதயம் கனத்து போகிறது என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் ராகவா லாரன்ஸ் தனது சம்பளத்திலிருந்து ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிப்பதாக ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிவாரண தொகையை பெற தூய்மை பணியாளர்கள் தங்கள் அடையாள அட்டையையும் வங்கி கணக்கு விவரங்களையும் ஒரு வாட்ஸப் நம்பருக்கு அனுப்புமாறு 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து 3,385 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ. 750 வீதம், சுமார் 25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது என்று தற்போது கதிரேசன் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி ராகவாலாரன்ஸ் டிவிட் செய்துள்ளார்.