தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில், ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல.
வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரை ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளதாகவும், இக்கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலையிலிருந்து தண்டோரா போடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ‘ரஜினி மக்கள் மன்றம்’ சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.