‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
தற்போது, நடிகர் விவேக் நடிப்பில் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 15-ஆம் தேதி) தான் நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
பின், நேற்று (ஏப்ரல் 16-ஆம் தேதி) நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17-ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார்.
தற்போது, இது தொடர்பாக நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ட்விட்டரில் “சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ‘சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.
#RipVivek pic.twitter.com/MSYVv9smsY
— Rajinikanth (@rajinikanth) April 17, 2021