ராகவேந்திரா திருமண மண்டப சொத்துவரி விவகாரம்… அனுபவமே பாடம் என ரஜினி போட்ட ட்வீட்!

  • October 15, 2020 / 10:45 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில், சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக ரஜினி தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவில் “கொரோனா லாக் டவுன் டைமில் இந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் இப்போது வரை எங்களது திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவே இல்லை. அப்படி இருக்கையில் இதற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆகையால், சொத்து வரி செலுத்த நிர்பந்திக்க கூடாது.

மேலும், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும், அபராத வட்டி விதிக்கவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. நேற்று (அக்டோபர் 14-ஆம் தேதி) சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் என்பவர் “மாநகராட்சி உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களிலேயே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்ததோடு, அபராதம் விதித்து, இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய உள்ளேன்” என்று எச்சரித்துள்ளார். இதன் பிறகு ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கை திரும்ப பெறுவதற்கு அனுமதி கேட்க, நீதிபதியும் அனுமதி கொடுத்தார். தற்போது, இது தொடர்பாக ரஜினிகாந்த் ட்விட்டரில் “ராகவேந்திரா மண்டப சொத்து வரி… நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்… தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus