தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மற்றும் பல முன்னணி நடிகர்களை உருவாக்கிய இயக்குனர் என்றால் அது கே.பாலச்சந்தர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் இவர்தான்.
இன்று கே.பாலச்சந்தரின் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார். தான் இன்று இவ்வளவு பெயர், புகழ் மற்றும் வசதியுடன் வாழ்வதற்கு முழுக்க முழுக்க கே.பாலச்சந்தர் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
கே.பாலச்சந்தர் படங்கள் என்றாலே பெண்களின் முன்னேற்றத்தையும் பெண்களை ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் வைத்து இயக்கியிருப்பார். இவரை இயக்குனர் சிகரம் என்று அழைப்பார்கள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் தனது திரையுலக அனுபவத்தில் 9 தேசிய விருதுகளையும், 13 பிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் 1987 ஆம் வருடம் “பத்மஸ்ரீ” விருது பெற்ற இவர், சினிமாவின் உயரிய விருதான “தாதா சாகேப் பால்கே” விருதையும் பெற்றுள்ளார்.
இவர் கவிதாலயா புரோடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்கி வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.
நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அரங்கேற்றம், அவர்கள், வறுமையின் நிறம் சிவப்பு, சிந்து பைரவி, தில்லுமுல்லு, உன்னால்முடியும் தம்பி, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன் என பல்வேறு சிறந்த வெற்றி படங்களை இயக்கியுள்ளார் கே.பாலச்சந்தர்.
நாகேஷ், சுஜாதா, ரஜினி, கமல், சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி, சரிதா, ரேணுகா, பிரகாஷ்ராஜ், நாசர், விவேக் என பல முன்னணி நட்சத்திரங்கள் இவரது இயக்கத்தில் நடித்துள்ளார்கள்.
இவர் 2014ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். என்னதான் இவர் மறைந்து விட்டாலும் இவரது படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை.
இந்த ஒப்பற்ற கலைஞரின் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளதாவது” இன்று எனது குருநாதர் கே.பி சாருடைய 90வது பிறந்தநாள். அவர் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் நான் ஒரு சிறு கலைஞனாக இருந்திருப்பேன். ஆனால் அவரது இயக்கத்தில் நடித்ததால் மட்டுமே இன்று இவ்வளவு பெயர், புகழ் மற்றும் வசதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது அனைத்திற்கும் கே.பி சார் தான் காரணம். என்னை அவரது படத்தில் நடிக்க வைத்து என்னுடைய மைனஸ் என்னவென்று எடுத்துக்கூறி என்னிடம் இருக்கும் திறமைகளை சுட்டிக்காட்டி என்னை இவ்வளவு தூரம் நல்ல நடிகனாக்கியது கே.பி சார்தான்”.
“என் அப்பா, அம்மா என்னை வளர்த்த என் அண்ணனை அடுத்து கே.பி சார் தான் எனக்கு மிகவும் முக்கியமானவர். எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற பல நடிகர்களுக்கு இவர் வாழ்க்கை கொடுத்துள்ளார். அவர் ஒரு இடத்தில் நடந்து வந்தால் அவருக்கு கிடைக்கும் மரியாதை இதுவரை சினிமாவில் யாருக்கும் கிடைத்து நான் பார்த்ததில்லை. அவ்வளவு கம்பீரமான மனிதர். அவர் என் குருநாதர் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அவர் மனித ஜென்மம் எடுத்து இந்த உலகில் வந்து எல்லா கடமைகளையும் மகனாக, கணவனாக, தந்தையாக, இயக்குனராக அனைத்து வேலைகளையும் சரியாக செய்து விட்டு விரைவில் காலமானார். இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம். அத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்த பெரிய மகான் அவர். அவர் இப்போது எங்கிருந்தாலும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் அவர் ஆத்மா இருக்கட்டும்” என்று உருக்கமாக ரஜினி கூறியுள்ளார்.