தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, வசூலிலும் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரஜினி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து பேசியதுடன், அவருடைய காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அப்போது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இது குறித்து மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் “சந்நியாசிகள், யோகிகள் என்னை விட வயதில் குறைவானவர்களாகவே இருந்தாலும், அவர்களின் காலில் விழுவது என்னுடைய பழக்கம்” என்று கூறினார்.