தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் நடித்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட GLIMPSE மற்றும் 3 பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 28-ஆம் தேதி) மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் “நெல்சன் என்னிடம் இந்த படத்தின் கதையை சொன்னபோதே எனக்கு பிடித்திருந்தது. உடனே, அதிகாரப்பூர்வமா அறிவிச்சுட்டோம். அதுக்கு அப்புறம் தான் அவர் இயக்கிய ‘பீஸ்ட்’ ரிலீஸானது. அந்த படம் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால், பலர் எனக்கு போன் பண்ணி நெல்சனுக்கு நீங்க படம் பண்ண வேண்டாம் என்று சொன்னார்கள்.
ஆனால், என்ன பொறுத்தவரைக்கும் ஒரு இயக்குநர் என்னைக்குமே தோற்பதில்லை, அவர் எடுக்கும் சப்ஜெக்ட் பொருத்து தான் அது வெற்றிப்படமா? இல்ல தோல்விப் படமா? என்று தீர்மானிக்கப்படுகிறது. நெல்சன் எப்பவுமே காமெடியா ஏதாவது பேசிட்டே இருப்பாரு. ஆனா, ஷூட்டிங்ல ஒரு சீனை எடுக்கும்போது ஹிட்லரா மாறிடுவாரு. அவர் நினைச்சது வர்ற வரைக்கும் விட மாட்டாரு.
குரைக்காத நாயும் இல்ல, குறை சொல்லாத வாயும் இல்ல. நாம நம்ம வேலைய மட்டும் பார்த்துட்டு போயிட்டே இருக்கணும். குடிப்பழக்கம் மட்டும் என்கிட்ட இல்லாம இருந்திருந்தா, இந்நேரம் இன்னும் பெரிய உயரத்தில் இருந்திருப்பேன். அது எனக்கு நானே வைத்துக்கிட்ட சூனியம். நீங்களும் குடிப்பழக்கத்தை விட்டிருங்க, அதுனால உங்க குடும்பத்துல இருக்கிறவங்க வாழ்க்கையும் பாதிக்கப்படுது.
காட்டுல எப்பவுமே சின்ன மிருகங்க பெரிய மிருகங்கள தொல்லை பண்ணிட்டே தான் இருக்கும். காக்கா எப்பவுமே கழுகை சீண்டிட்டே இருக்கும். ஆனால், கழுகு அமைதியா தான் இருக்கும். இந்த உலகத்தோட உன்னதமான மொழி மௌனம் தான். என்னோட ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு 1977-ல இருந்தே பிரச்சனை தான்.
எனக்கு அப்போ அந்த பட்டத்தை கொடுத்தப்பவே நான் வேண்டாம்னு சொன்னேன். காரணம் அப்போ சிவாஜி சாரும் நடிச்சுட்டு இருந்தாங்க, கமல் மிகப் பெரிய நடிகரா இருந்தாரு. உடனே, ரஜினி பயந்துட்டாருன்னு பேச ஆரம்பிச்சாங்க. நான் பயப்படுறது ரெண்டே பேருக்குதான், ஒன்னு அந்த கடவுள், இன்னொன்னு நல்லவங்களுக்கு, வேற யாருக்குமே நான் பயப்பட மாட்டேன்” என்று பேசினார்.