முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த புதிய படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.
இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டினார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ மற்றும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்.
வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி ட்விட்டரில் “அண்ணா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டார்.
அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். சில நாட்களுக்கு அண்ணா வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவிருக்கிறார். அண்ணா நலம் பெற பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை” என்று கூறியிருந்தார். தற்போது, சூர்யாவின் 2D நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ட்விட்டரில் “இன்று சூர்யா அண்ணாவுக்கு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்துள்ளது. உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
.#AnbanaFans Anna tested NEGATIVE, Thank you for all your prayers and wishes 🙏🏼🙏🏼😊😊 @Suriya_offl
— Rajsekar Pandian (@rajsekarpandian) February 19, 2021