நேற்று இர்பான்… இன்று ரிஷி கபூர்…சோகத்தில் பாலிவுட்…!
April 30, 2020 / 02:55 PM IST
|Follow Us
ரிஷி கபூர் மரணமடைந்த நிலையில், ஊரடங்கு விதிகளை ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ரிஷி கபூர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் இன்று காலமானார். 67 வயதான அவர், மறைந்த நடிகர் ராஜ் கபூரின் 2-வது மகன் ரிஷி கபூர். 1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 1973-ல் கதாநாயகனாக அறிமுகமானார். பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்பட்டார்.
இந்தி திரையுலகில் பிரபலமாக உள்ள ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் மகனாவார்.2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிஷி கபூர் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்கு திரும்பினார். ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
லாக்டவுன் சமயத்திலும் மும்பையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.ரிஷி கபூரின் மரணம் குறித்து அவருடைய குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், இரு வருடங்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரிஷி கபூர், இன்று காலை 8.45 மணிக்கு மரணமடைந்தார். கடைசி வரை எல்லோரையும் குதூகலப்படுத்தியதாக மருத்துவர்களும் செவிலியர்களும் தெரிவித்தார்கள்.இரு வருடங்களாக இரு கண்டங்களுக்கிடையே பறந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட போதும் மன உறுதியுடனும் வாழ்க்கையை முழுவதுமாகவும் வாழவும் நினைத்தார். குடும்பம், நண்பர்கள், உணவு, படங்கள் போன்றவை அவர் கவனத்தில் இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில் அவரைச் சந்தித்தவர்கள், நோயால் பாதிக்காதவாறு அவர் வாழ்வதை எண்ணி ஆச்சர்யப்பட்டார்கள்.உலகம் முழுவதிலும் இருந்து அவர் மீது ரசிகர்கள் அன்பு செலுத்தியதைக் கண்டு மிகவும் நெகிழ்ந்தார். கண்ணீரால் அல்ல புன்னகையால் மட்டுமே அவர் நினைவுகூரப்படவேண்டும் என்பதை ரசிகர்கள் உணர்ந்துகொள்வார்கள்.இந்த இழப்பின்போது உலகம் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருப்பதையும் உணர்கிறோம். பொது இடத்தில் மக்கள் கூடுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ரசிகர்களும் நலம் விரும்பிகளும் நண்பர்களும் விதிகளை மதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.