‘பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து’ படங்கள் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை ரித்விகா. இவர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 2-வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ரித்விகா நடித்து இந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியான படம் ‘வால்டர்’. சமீபத்தில், ரித்விகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ஒரு ரசிகர் “பருவத்துல பன்னி கூட அழகாத் தான் இருக்கும்.. SC பெண்கள்” என்று கமென்ட் போட்டிருந்தார்.
இதற்கு ரித்விகா “சரிங்க மிஸ்டர் பாடு… சாரி மிஸ்டர் மாடு” என்று பதில் கமென்ட் போட்டிருந்தார். தற்போது, இது தொடர்பாக ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில் “இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இதற்கும் இனி வருமின் அதற்கான பதிலாகவும்” என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன்.
நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க. ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி. பி.கு – தலித் பெண்கள் என்னை விட அழகு” என்று ரித்விகா தெரிவித்துள்ளார்.
இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இதற்கும் இனி வருமின் அதற்கான பதிலாகவும்… pic.twitter.com/6PF0sJj3Oo
— Riythvika✨ (@Riythvika) July 20, 2020