தமிழ்நாடு இயக்குனர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் தங்களது பணிகளை அற்புதமாக தொடங்கி உள்ளனர் . இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள துணை, இணை இயக்குனர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தருவதற்கான முயற்சியில் உள்ளனர் புதிய நிர்வாகிகள் .
அந்த வகையில் தற்போது பெங்களூருவைச் சேர்ந்த இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 52 பேரை இயக்குனர்களாக அறிமுகம் செய்ய இருக்கிறது இயக்குனர் சங்கம் . இந்த நிகழ்வுக்கான அறிமுக விழா சமீபத்தில் நடந்தது . விழாவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்பொழுது சினிமா ஒரு காலத்தில் கலைஞர்களின் கையில் இருந்தது ஆனால் தற்போது வியாபாரிகளின் கையில் அது இருக்கிறது. அதை மீட்டு கொண்டுவரவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார் .
மேலும் இதுவரையில் 195 கதைகள் கேட்கப்பட்டு அதில் 52 கதைகளை படமாக்க முடிவு செய்திருக்கிறோம் என்றும் பெங்களூரு இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 10 படங்களை தயாரிக்கிறோம் என்றும் அதில் 4 படங்களில் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது என்றும் கூறினார் .படம் இயக்க விருப்பம் உள்ள இயக்குனர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் மனதில் உள்ள கதைகளை குறும்படமாக எடுத்து கொடுக்கலாம் என்றும் கூறினார் .
அதோடு குறும்படம் எடுக்கத் தேவையான கேமரா, லைட்டிங் உள்ளிட்ட வசதிகளை சங்கம் செய்து கொடுக்கும் என்றும் தேவைப்பட்டால் நிதி உதவியும் தரும். எடுக்கும் குறும்படங்கள் தேர்வு கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டால் படமாக தயாரிக்கப்படும். மேலும் சினிமா துறையில் உள்ள மற்ற சங்க உறுப்பினர்களும் படம் இயக்கும் ஆர்வம் இருந்தால் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து ஒரு குறும்படம் எடுத்து தரலாம் என்றும் தெரிவித்துள்ளார் .மேலும் இதற்காக ஒரு போட்டி நடத்துகிறோம் அதில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையிலான குழுவினர் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்வார்கள் என்றும் அதில் தேர்வாகும் முதல் 3 படங்கள் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார் .
இந்த அறிவிப்பு பல துணை இயக்குனர்களின் கனவை மெய்ப்பிக்க நிச்சயம் உதவும் என்று நம்பலாம் .