2008 ஆம் ஆண்டு வெளியான “தாம்தூம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சாய்பல்லவி. இவர் மலையாள படமான “பிரேமம்” மூலம் ரசிகர்கள் இடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.
‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நடன கலைஞராக பலர் மத்தியில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட இவர், நடிகையாக உருமாறி சமீபத்தில் தனுஷ் ஜோடியாக “மாரி 2” படத்திலும் நடிகர் சூர்யா ஜோடியாக “என்ஜிகே” படத்திலும் நடித்திருந்தார்.
இவர் தற்போது தெலுங்கு படமான “லவ் ஸ்டோரி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகையாக இருக்கும் சாய்பல்லவி ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
லாக்டோன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சாய்பல்லவியை கோரியோகிராபி செய்து தர இயக்குனர் சேகர் கம்முல்லா வேண்டுகோள் விடுத்துள்ளதாக திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.
இதற்கு சாய்பல்லவி ஒப்புக்கொண்டால் நடிகையாக இருக்கும் இவர் நடன இயக்குனராகவும் மாறிவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.