டிக்கிலோனா திரைப்படத்தில் இயக்குநர் கார்த்திக் யோகிக்கும் மணமகள் வினி ஷாமுக்கும் நேற்று முன் தினம் திருச்சியில் திருமணம் நடந்தது. பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண வைபவம் சிறப்பாக நடந்தது. திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் காளி வெங்கட், கண்ணன் ரவி (மண்டேலா பட நடிகர்), வத்ஸன் (எங்கேயும் எப்போதும்) ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், திருமணத்தில் திரைப்பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கரோனா ஊரடங்கு என்பதால் நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர். நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், சாம்ஸ் ஆகியோர் இணையவழியில் புதுமணத் தம்பதியை வாழ்த்தினர். பலூன் இயக்குநர் சினிஷ், எட்டு தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ், மண்டேலா இயக்குநர் அஸ்வின், டோரா இயக்குநர் தாஸ் ராமசாமி, தர்மபிரபு இயக்குநர் முத்துக்குமார், ப்ரூஸ் லீ இயக்குநர் பிரசாந்த், விழா இயக்குநர் பாரதி பாலா, சொன்னா புரியாது திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்களுடன் மாஸ்டர் திரைப்பட எடிட்டர் ஃபிலோமின் ராஜ், மாநகரம், ஜிப்சி திரைப்பட கேமராமேன் செல்வா ஆகியோரும் தம்பதிகளை வாழ்த்தினர்.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனர் கே.ஜே. ஆர் ராஜேஷ், கிளாப் போர்டு சத்யா மற்றும் டிக்கிலோனா திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் டிக்கிலோனா எப்போது வெளியாகும் என்று தங்களின் எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர்.
நடிகர் சந்தானம் மூன்று விதமான கெட் அப்களில் நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இத்திரைப்படம் டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. 2027ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்துவதற்காக டைம் டிராவல் செய்வதை போல் ‘டிக்கிலோனா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது