செக் மோசடி… சரத்குமார் – ராதிகாவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை!
April 7, 2021 / 05:29 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சரத்குமார். இவரும் இவரது மனைவியும், பாப்புலர் நடிகையுமான ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும் இணைந்து ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘இது என்ன மாயம்’.
இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்தார், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். 2014-ஆம் ஆண்டு இப்படத்தினை தயாரிப்பதற்காக ‘ரேடியன்ஸ் மீடியா’ என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 கோடி ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனம் வாங்கியிருக்கிறது.
வாங்கிய பணத்தை 2015-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் கொடுப்பதாக உறுதி அளித்துவிட்டு, பணத்தை திருப்பி கொடுக்காமல் ‘பாம்புச் சட்டை’ என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்தது ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனம். இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம். பின், ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனம் தரப்பில் இருந்து ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட 7 செக்கும் பவுன்ஸ் ஆகியுள்ளது.
இதனையடுத்து எம்.எல்.ஏ, எம்.பி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் இது தொடர்பாக செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தது ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம். இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவருக்கும் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்வரை தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சரத்குமார், ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் மூவருக்கான தண்டனையையும் 30 நாட்கள் நிறுத்தி வைக்குமாறு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.