நாளுக்கு நாள் கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.
இதன் காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கும், இதர மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக சினிமா துறை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சினிமா படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முழு ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளில் நடைபெறலாம் என்று அரசு அறிக்கை விடுத்திருந்தது. இதை தொடர்ந்து சில சீரியல் படப்பிடிப்புகள் நடைபெற்றது.
பிரபல தெலுங்கு சீரியல் நடிகை நவியா சுவாமி தமிழிலும் “வாணி ராணி” எனும் பிரபல மெகா சீரியலில் நடித்துள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை தெரிந்தபின் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் தனது அறையில் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதைப்பற்றி அவரது அறிக்கையில் “ஆம்.எனக்கு கொரோனா பாஸிட்டிவ், நேற்றுதான் ரிப்போர்ட் வந்தது நான் செய்த முதல் காரியம் ஷூட்டிங்கை நிறுத்தியது. மேலும் டாக்டர் சொன்ன அறிவுரைகளை கேட்டு வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கொரோனா தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருப்பது நல்லது. எனினும் தொற்று ஏற்பட்டால் அதைப் பற்றி பேசுவதற்கு கூச்சப்பட ஒன்றுமில்லை. தகுந்த ட்ரீட்மென்ட்களை நான் எடுத்துக் கொண்டுதான் வருகிறேன். எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் அன்பால் நான் விரைவில் குணமடைவேன். யாருக்கேனும் கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் நம்பிக்கையுடன் இதை எதிர்கொள்ள வேண்டும். பயந்து விடக்கூடாது”என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தன்னுடன் பணிபுரிந்தவர்களையும் தன்னுடன் இருந்த நண்பர்களையும் சோதனை செய்து கொண்டு ஏதேனும் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று வேண்டி கேட்டுள்ளார்.