சென்ற வருடம் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. இந்தப் படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடத்தை நிறைவு செய்ததையொட்டி இந்த படத்தில் தன் அனுபவம் குறித்து ஸ்ரத்தா ஸ்ரீநாத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் அஜித்குமாருடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா டரியாங் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் காட்சிகளை நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். கோகுல் சந்திரன் இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்திருந்தார்.
இந்தப் படம் முதலில் இந்தியில் வெளியான “பிங்க்” எனும் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்தியில் இந்தப்படத்தை தயாரித்திருந்த போனிகபூர் தமிழிலும் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வையில் அஜித் தேர்வு செய்திருந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்ததற்கு அனைவரும் பாராட்டியிருந்தார்கள்.
பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான இந்த கதையில் நடித்த அனைத்து நடிகர்களுமே தங்கள் நடிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டார்கள். தற்போது இந்த படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து நினைவுகூர்ந்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர் குறிப்பிட்டுள்ளதாவது “இப்போது கூட என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நேர்கொண்ட பார்வை திரைப்பட குழுவிற்கு என் நன்றி. மீரா தைரியமான பெண். அவள் ஒரு போராளி. அனைவரும் மீராவைப் போல் இருங்கள். அனைவரும் பேச பயப்படும் ஒரு விஷயத்தைப் பற்றிய கதையை தேர்ந்தெடுத்து அதில் அஜித் நடித்திருந்தார், அவருடன் நடித்தது எனக்கு பெருமையான விஷயம்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஸ்ரத்தா ஸ்ரீநாத் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் “சக்ரா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் இந்தப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சிருஷ்டி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.