“நான் நலமாக இருக்கிறேன்”… பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்!

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை அக்ஷரா ஹாசனின் அக்காவாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த ஸ்ருதி ஹாசனை ‘7-ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

‘7-ஆம் அறிவு’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘3, பூஜை, புலி, வேதாளம், சி3, லாபம்’ என படங்கள் குவிந்தது. நடிகையாக மட்டுமின்றி இசையிலும் அதிக ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு சூப்பராக இசையமைத்து அசத்தினார்.

மேலும், பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் ‘அடியே கொல்லுதே, கண்ணழகா காலழகா, உன் விழிகளில், ஏண்டி ஏண்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘சலார்’ (கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி) மற்றும் பாலகிருஷ்ணாவின் 107-வது படம் (தெலுங்கு) என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் தனக்கு PCOS என்ற ஹார்மோன் பிரச்சனை இருப்பதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் பரவியது.

தற்போது, இது தொடர்பாக ஸ்ருதி வெளியிட்டுள்ள வீடியோவில் “PCOS என்ற ஹார்மோன் பிரச்சனை எனக்கு இருக்கிறது. ஆனால், நான் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இல்லை. அதனால் என்னை பற்றி பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.